சென்னை: எங்கள் சாபத்தில் இருந்து பேரறிவாளன் தப்ப முடியாது, உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது குறித்து, ராஜீவ் காந்தி  படுகொலை சம்பவத்தின்போது குண்டுவெடிப்பில் பலத்த காயமுடன் உயிர் பிழைத்த பெண்காவலர் அனுசுயா வேதனையுடன் தெரிவித்து உள்ளார். ஒரு வழக்கில் எத்தனை விதமான தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

1991ம் ஆண்டுமே 21ம் தேதியன்று தமிழ்நாட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளின் மனிதகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். பூந்தமல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு வெடிப்பில்  ராஜீவ்காந்தியின் பாதுகாப்பு அதிகாரிகள், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர்.  16காவலா்கள் உயிரிழந்தனா். 37காவலா்கள் படுகாயம் அடைந்தனா். பொதுமக்கள் பலரும் காயமடைந்தனா்.
இந்த கோரமான சம்பவம் நடைபெற்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களில் இன்ஸ்பெக்டர் அனுசுயாவும் ஒருவர். இவர், குண்டு வெடிப்பில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு பல மாத சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தவர். தற்போது காவல்துறை பணியில் ஓய்வுபெற்ற நிலையில், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்து தனது வேதனையை தெரிவித்து உள்ளார். 
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ, 7 பேரை குற்றவாளி என உறுதி செய்தது. அதை பூந்தமல்லி நீதிமன்றமும் ஏற்று அவர்களுக்கு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீட்டிலும், அவர்கள்  குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டிலும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் குற்றவாளிகள் என ஊர்ஜிதம் செய்யப்பட்டு, அவர்களுக்கு துாக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. பின், கருணை அடிப்படையில், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கோர்ட் நடைமுறைகள் அத்தோடு முடிந்து விட்டன.  ஆனால், உச்ச நீதிமன்றம் தற்போது, பேரறிவாளனை விடுவித்துள்ளது.

ஒரு நீதிமன்றம், ஒரு வழக்கில் எத்தனை விதமான தீர்ப்புகளை வழங்க முடியும்?

ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முடியும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும்.  அப்படி இல்லாமல், மனிதாபிமான அடிப்படையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உள்பட 16 பேரை கொன்று தீர்த்த பேரறிவாளனை, கோர்ட் விடுவிக்கும் என்றால், கோர்ட் நடைமுறையை எப்படி எடுத்து கொள்வது என புரியவில்லை.

இன்றைக்கு பேரறிவாளனை வெளியே விட்டவர்கள், அடுத்து அவரோடு சேர்ந்து கொலைகள் செய்த மேலும் ஆறு பேரையும் விடுவிப்பார்களா? அப்படியென்றால், பேரறிவாளன் உள்பட ஏழு பேரும் செய்தது தியாகமா?

கோர்ட் பார்வையின்படியே எடுத்து கொள்வோம்.

கோவையில் குண்டு வெடிப்பின்போது கைதான மற்றவர்களையும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் இதே தீர்ப்பும்,  நீதியும் பொருந்துமா?

எங்களை பொறுத்தவரை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு, ஒரு நாளும் மன்னிப்பு கிடையாது.

கோர்ட் விடுதலை செய்யலாம். ஆனால், ராஜீவ்காந்தி  கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களும், ராஜீவ்காந்தி  ஆன்மாவும் ஒருபோதும்  அவர்களை மன்னிக்காது,

பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர்  ஒவ்வொரு நிமிடமும் விடும் சாபத்திலிருந்து, கொலையாளிகள் தப்ப முடியாது.

இவ்வாறு  கூறினார்.

பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட தியாகியா? நாங்கள் தமிழர்கள் இல்லையா! கொந்தளிக்கும் பாதிக்கப்பட்டோர்…