கோவை: ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக நேற்று இரவு கோவை புறப்பட்டு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோவையில் திமுக அரசின் ஓராண்டு சாதனை  கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 20ஆம் தேதி மலர் கண்காட்சி, ஊட்டி கோடை விழா ஆகியவற்றை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  மாலை 6 மணிக்கு கோவை புறப்பட்டு சென்றார்.  அங்குள்ள ரெட் பீல்டு அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கியவர், இன்று வ.உ.சி மைதானத்தில் பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த கண்காட்சி 7 நாட்கள் நடைபெற உள்ளது.  இதில்,  கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட அகழாய்வு பொருள்களின் மாதிரிகள், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன.

இதனை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று பார்வையிட்டார். அவர்களுடன்,  அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, வெள்ளகோவில் சுவாமிநாதன், தங்கம் தென்னரசு, அன்பரசன், கயல்விழி செல்வராஜ், நீலகிரி எம்.பி.ஆ.ராசா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதைத்தொர்ந்து,  அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடக்கும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் பல்வேறு தொழில் கூட்டமைப்பினர், தொழில் முனைவோர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.