காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமைப் பயணம் தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வரும் 30 ம் தேதி நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்ச்சிக்குப் பின் யாத்திரை நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் நேற்று காஷ்மீருக்குள் நுழைந்த யாத்திரைக்கு போதுமான காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தாதை அடுத்து ராகுல் காந்தியின் தனிப்படை பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பயணத்தை கைவிட வலியுறுத்தினர்.

இதனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நேற்று பாதிவழியிலேயே தனது நடைப்பயணத்தை நிறுத்திவிட்டு காரில் ஏறிச் சென்றார்.

இன்று மீண்டும் நடைப்பயணத்தை துவங்கியுள்ள ராகுல் காந்தி வரும் 30 ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

இந்திய ஒற்றுமை பயண யாத்திரைக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் காஷ்மீரிலும் கட்டுக்கடங்காத கூட்டம் யாத்திரையில் கலந்து கொண்டுள்ளது.

நிறைவு நிகழ்ச்சியில் எவ்வளவு கூட்டம் வரும் என்பது ஊகிக்க முடியாத நிலையில் நேற்று நடைபெற்றது போல் பாதுகாப்பு குறைபாடு ஏதும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

“ஜம்மு காஷ்மீர் காவல்துறையை நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் அவர்கள் யாத்திரை முடியும் வரை முழுமையான பாதுகாப்பை வழங்க உறுதியளித்துள்ளனர். இருப்பினும், ஒவ்வொரு நாளும் பாரத் ஜோடோ யாத்ராவில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு ஆதரவு வழங்குகிறார்கள்.

சாதாரண மக்கள் யாத்திரையில் கலந்துகொள்வது ஒரு தன்னியல்பான ஒன்று என்பதால் அடுத்த இரண்டு நாள் யாத்திரையிலும், ஜனவரி 30-ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவிலும் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜனவரி 30-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விஷயத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஜனவரி 30-ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் வரை போதுமான பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.