டில்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர்  சோனியாகாந்தி அமைத்துள்ளார்.

ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி, நாடு முழுதும் பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுக்க அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டு உள்ளார். தமிழகம் உள்பட பல மாநிலங்களில், பல மாநில கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுக்கும்படி வலியுறுத்திவருகின்றனர்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் கேள்வி எழுப்பப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர்கள் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு மோடி அரசு எந்தவித பதிலும் அளிக்கமாமல்  “அமைதியாக” இருந்துவிட்டது.

இந்த நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை ஆய்வு செய்ய, காங்கிரஸ் கட்சி சார்பில்  7 மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி  அமைத்து உள்ளார்.

இதன் ஒருங்கிணைப்பாளராக மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும் கமிட்டி உறுப்பினர்களாக  மூத்த தலைவர்கள் மோகன் பிரகாஷ், ஆர்.பி.என்.சிங், அபிஷேக் மனு சிங்வி மற்றும் சல்மான் குர்ஷித் , பி.எல். புனியா மற்றும் குல்தீப் பிஷ்னோய் ஆகியோர் குழுவில் மீதமுள்ள உறுப்பினர்கள் என்று அக்கட்சியின்  அறிக்கை தெரிவித்துள்ளது.

சோனியா காந்தி நேற்று முன்தினம் தேசிய பிரச்னைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்க, திக்விஜய் சிங் தலைமையில் ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை  அமைத்தார்.

இந்த கமிட்டிகளில்  தமிழக காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.