டெல்லி: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு வருவதால், , 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த  உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கொரோனா 2-வது அலையின் பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், ஓணம் பண்டிகைக்கு அனுமதி அளித்த கேரள மாநலி அரசின் மெத்தனம் காரணமாக, அங்கு தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. தினசரி பாதிப்பு 30ஆயிரத்தை தாண்டிய நிலையில்,  நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்புகளில் 75 சதவிகித கொரோனா பதிவு கேரளாவில் கண்டறியப்பட்டு வருகிறது. இது பினராஜி விஜயன் தலைமையிலான  மாநில அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் கல்வி நிறுவனங்களை திறந்துள்ள கேரள அரசு,   வருகிற 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 11-ம் வகுப்பு தேர்வுகளை நேரடியாக நடத்துவதாக அறிவித்து உள்ளது.

இதை எதிர்த்து அங்குள்ள பெற்றோர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், பள்ளித் தேர்வை நடத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் தலையிட முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் நழுவி விட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் ரசூல்ஷான் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. வாதங்களைத் தொடர்ந்து,  ‘கேரளாவில் அபாயகரமான அளவுக்கு கொரோனா சூழல் நிலவுகிறது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் கேரளாவில் உள்ளனர். இந்நிலையில் 11-ம் வகுப்பு வயது குழந்தைகளை அபாயத்துக்கு உள்ளாக்க முடியாது’ என்று கூறி, 11-ம் வகுப்பு தேர்வை நேரடியாக நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தனர். பின்னர் அடுத்த விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.