டில்லி

சித்தார்த்தா மரணம் குறித்து மோடி அரசு  பொருளாதாரத்தில் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

காஃபி டே உரிமையாளர் வி ஜி சித்தார்த்தா கடந்த திங்கள் அன்று இரவு மங்களூரு அருகே காணாமல் போனார்.   நேற்று அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.   இதற்கு சில நாட்கள் முன்பு அவர் எழுதிய கடிதத்தில் தமக்கு வருமான வரித் துறை மிகவும் தொல்லை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

சித்தார்த்தா மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியத் தொழிலதிபர்கள் பலரும் அரசால் கடும் மன  உளைச்சலில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.    சித்தார்த்தாவின் மரணம் குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி  தனது டிவிட்டரில், “அரசு எந்த ஒரு தொழிலிலும் தலையிடாது என்பது வெகு நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது.   இதை மோடி தனது 2014 ஆம் வருடத் தேர்தல் பிரசாரத்தில் இருந்தே சொல்லி வருகிறார்..  ஆனால் இன்று அவர் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு சுதந்திரமான  தடையற்ற பொருளாதாரம் அளிக்காமல் துரோகம் செய்து விட்டார்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்வி, “மோடி இரண்டாம் முறையாகத் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே, பெரும்பான்மை, சிறுபான்மை, காஷ்மீர், பாகிஸ்தான், இஸ்லாமியப் பெண்கள், ராமர் மற்றும் வன விலங்குகள் என  மக்கள் கவனத்தைத் தொடர்ந்து திசை திருப்பி வருகிறார்.  ஆனால் உண்மையில் நடப்பது என்ன?  பொருளாதார ஏமாற்றம்,  வேலை இன்மை அதிகரிப்பு, விவசாயிகள் மரணம், சட்டம் மற்றும் ஒழுங்கின்மை பொன்றவைகளே உள்ளன்” என தெரிவித்துள்ளார்.

காஃபி டே அதிபர் சித்தார்த்தாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சசி தரூர்  இந்த மரணம் தற்போதுள்ள கவலைக்குரிய நிலையில் எதிரொலியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  அத்துடன் பாஜக ஆட்சியில் சுலபமாக தொழில் நடத்தும் கொள்கை சுலபமாகத் தொழிலை முடிக்கும் கொள்கையாக மாறி உள்ளதாகவும் கூறி உள்ளார்.