டில்லி:

நாடு முழுவதும் உள்ள கால் டாக்சிகளின்  சேவைகளை சட்டப்படி ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்றும், அதில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் App மூலம் கண்காணிக்க  வேண்டும் என்று உச்சநீதி மன்றம்  அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு கால்டாக்சி நிறுவனங்கள், பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. இதில், ஓலா, உபேர் போன்ற கால் டாக்ஸி சேவைகள் முன்னணியில் உள்ளன. இதில் பயணம் செய்யும் பெண் பயணிகள் சில சமயம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கால் டாக்சியில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மகளிர் நல சமூக அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையின்போது, ஏற்கனவே நடைபெற்ற டில்லி நிர்பயா பாலியல் வன்கொடுலை கொலை வழக்கைச் சுட்டிக்காட்டி பேசிய நீதிபதிகள், தற்போது, கால் டாக்ஸி நிறுவனங்கள் பெருகி வருவதால், அதில் பயணம் செய்யும் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பியவர்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகை யில், மொபைல் செயலிகள்  (App) மூலம் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மத்தியஅரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், அதற்கான சட்டத் திருத்தம்  செய்து  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எஎன்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.