ஹைதராபாத்: பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய நள்ளிரவில் சாதாரண பெண்மணி போல தனியாக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பலர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மலகாஜ்கிரி காவல் ஆணையராக சமீபத்தில் பொறுப்பேற்ற பி. சுமதி, இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய ரகசிய ஆய்வில் ஈடுபட்டார்.

இதற்காக காவல் சீருடையில் இல்லாமல், சாதாரண பெண்மணி போல சுடிதார் அணிந்து நள்ளிரவில் தில்சுக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக சுற்றிப் பார்த்தார். சுமார் 2 மணி நேரம் அவர் பல இடங்களில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது சில இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் அவரிடம் தவறான முறையில் பேசியதுடன், சிலர் பைக்கை நிறுத்தி தொந்தரவு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த சுமதி, உடனடியாக போலீசாரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தார். பின்னர் அங்கிருந்த போலீசாருடன் ஆலோசனை நடத்திய அவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரவு ரோந்து பணிகள் அதிகரிக்கப்படும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.