டில்லி

சென்ற வருட சி ஏ ஜி அறிக்கையில் விவசாய வருமானமாகக் காட்டப்பட்டு ரூ.500 கோடி  மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

விவசாயம் மூலம் வரும் வருமானத்துக்கு வருமான வரியில் இருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   இந்த விலக்கு விவசாயத் தொழிலை ஊக்குவிப்பதற்காக அளிக்கப்படுகிறது.    ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் விவசாய வருமானமாகக் காட்டப்பட்டு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது அளிக்கப்பட்டுள்ள சி ஏ ஜி (COMPTROLLER AND AUDITOR GENERAL) அறிக்கையில் இதில் ஏராளமான மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   சென்ற வருடத் தணிக்கையில் இது போல  விவசாய வருமானமாகக் காட்டப்பட்ட தொகையில் ரூ.500 கோடிக்கான கணக்குகளை வருமான வரித்துறை சோதனை இடவில்லை என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,”சந்தேகப்படும் படி உள்ள 6778 கணக்குகளில் 1527 கணக்குகள் எவ்வித ஆவணமும் இன்றி உள்ளன.  அத்துடன் 716 கணக்குகளில் தேவையான ஆவணங்கள் அளிக்கப்படவில்லை.  மற்றும் 1270 கணக்குகளில் விவசாய வருமானம் எனக் கூறப்பட்ட தொகைக்கு தேவையான ஆவணங்கள் அளிக்கப்படாமல் இருந்துள்ளன.

இவ்வாறு கணக்குகள் அளிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகம்  ஆகியவை முன்னிலையில் உள்ளன.  இதில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.  இங்கு அளிக்கப்பட்ட பல கணக்குகளில் எந்த ஒரு ஆவண ஆதாரமும் இல்லாமல் விவசாய வருமானம் எனக் கூறப்பட்டதை வருமான வரித்துறை சோதனை இன்றி ஏற்றுக் கொண்டுள்ளது.

அடுத்ததாக கர்நாடகாவும் மூன்றாவதாக தமிழகமும் வருகின்றன.  இவற்றின் மூலம் தணிக்கை அதிகாரிகள் இந்த விவசாய வருமான வரி விலக்கு சரியான மக்களுக்குப் போய் சேருகின்றதா என்பதை கவனிக்கத் தவறி உள்ளனர்.   இதன் மூலம் கணக்கில் வராத வருமானத்தை விவசாய வருமானம் எனக் கூறி மோசடி  நடந்திருக்கலாம் என்னும் ஐயம் எழுந்துள்ளது.

இதை தடுக்க வருமானவரித்துறை விவசாய வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் காட்டப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் முழுவதுமாக சோதித்திருக்க வேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் மோசடிகள் தடுக்கப்படும்.  அது மட்டுமின்றி இந்த வரி விலக்கு உண்மையான விவசாய வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் இந்த சோதனைகள் அமையவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.