கமதாபாத்

கமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.  இங்குப் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.  இதில் 800க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.   இவர்களில் பெரும்பாலானோர் அகமதாபாத் பொது மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளனர்.

இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு அவரது உறவினர்களிடமொரு சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அந்த  சடலம் பி பி இ உடையால் மூடப்பட்டிருந்தது.   உறவினர்கள் அந்த உடலைப் பிரிக்காமல் அப்படியே எரியூட்டி உள்ளனர்.  அதற்கு பிறகுதான் கதையின் கிளைமாக்ஸ் நடந்துள்ளது.

இறந்ததாகக் கூறப்பட்ட அந்த நோயாளியின் வீட்டுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளி உயிர் பிழைத்து விட்டதாகவும் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தற்போது தாங்கள் எரியூட்டியது யாருடைய உடலாக இருக்கும் என குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போது வந்துள்ள தகவலின்படி நோயாளி இறந்து விட்டதாகவும் அது தெரியாமல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர் பிழைத்ததாகத் தவறாகத்  தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் எரியூட்டப்பட்ட சடலம் அந்த குடும்பத்தினரின் உறவினருடையது தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

இதனால் குடும்பத்தினர் தங்கள் உறவினர் இறந்தாரா? இறக்கவில்லையா?  தாங்கள் எரியூட்டியது உறவினர் சடலம் தானா?  அல்லது வேறு சடலமா எனக் குழப்பத்தில் உள்ளனர்.