பெங்களூரு:

ம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவசரமில்லை என்று சட்டமன்றத்தில் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறினார்.

கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கு தொடர் பான தீர்மானத்தின் மீது நேற்று முதல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றே வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்திய நிலையில், கவர்னரும், நேற்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது இன்று மதியம் 1.30 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகருக்கும், முதல்வருக்கும் உத்தரவிட்டார்.

நேற்றைய விவாதத்தின்போது,  ஏற்பட்ட அமளியை அடுத்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஒத்தி வைத்துவிட்டு சென்று விட்டார். இதனையடுத்து, சபாநாயகர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டிய எடியூரப்பா  மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்  நேற்றிரவு கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இன்று 2வது நாளாக சபை கூடியதும், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி,  நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அரசை காப்பாற்றுவதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன் என்று கூறியவர்,   நீங்கள் தற்போதும் அரசை அமைக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சியினரை பார்த்து கூறினார்.

மேலும், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றே நடத்த வேண்டும் என்ற அவரசம் ஒன்றும் இல்லை என்று, கவர்னரின் உத்தரவுக்கு பதில் தெரிவித்தவர், வரும்  திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும், அதுவரை  தான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டேன் என உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய குமாரசாமி, ஆட்சிக்கு எதிராக ராஜினாமா கொடுத்துள்ள  அதிருப்தி எம்.எல்.ஏக்களை கடுமையாக தாக்கி பேசியவர்,  இது போன்றவர்களின் ஆதரவைப் பெற்று  பாரதிய ஜனதா கட்சி எத்தனை நாட்கள் ஆட்சி நடத்தப்போகிறது என்பதை, தான் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சட்ட அமைச்சர், தற்போது சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும் என்று கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.