சோன்பத்ரா, உத்திரப் பிரதேசம்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு சட்ட  ஒழுங்கு விவகாரத்தில் கடும் தோல்வி அடைந்துள்ளது.   சட்டம் குறித்த பயம் மாநிலம் முழுவதுமே இல்லாத நிலை உள்ளது.   இந்த குற்றச்செயல்களால் சாதாரண பொது மக்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் சமீபத்தில் ஒரு நிலத் தகராறில் 10 பேர் கொல்லப்பட்டு 18 பேர் காயமடைந்துள்ளனர்.  சம்பல் பகுதியில் நடந்த மற்றொரு நிகழ்வில் விசாரணைக் கைதிகளை அழைத்துச் சென்ற காவல்துறை வாகனத்தைத் தாக்கிய கும்பல்  இரு காவலர்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளது.

சோன்பத்ரா சம்பவத்தில் காயமடைந்தவர்கள்  மற்றும் மரணமடைந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இன்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அந்த பகுதிக்குச் சென்றுள்ளார்.   அவரை உத்திர பிரதேச காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.  அத்துடன் அவரை எந்த ஒரு உத்தரவு மற்றும் ஆவணம் இன்றி கைது செய்துள்ளனர்.

இதனால் இந்த பகுதி மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.  அரசு தனது தோல்வியை மறைக்க இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.