பழைய நோட்டுகளால் கண்ணீர்.. உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வேம்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் 58 வயதான சோமு.  இவர் பார்வையற்றவர். இவரது மனைவி 49 வயது பழனியம்மாள்.  அவரும் ஒரு மாற்றுத்திறனாளி.  பேருந்தில் ஊதுபத்தி, சாம்பிராணி விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.  தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களது வீட்டில் சேமித்து வைத்திருந்த ரூ. 24 ஆயிரம் பணத்தை அன்றாட செலவிற்குப் பயன்படுத்த எண்ணியுள்ளார்.  அப்போது தான் அவை மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள்  என்றும்,  இந்த ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாது என்பதும் தெரிய வந்துள்ளது இவர்களுக்கு.  இதனை மாற்றிக் கொடுத்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இத்தகவலை அறிந்த ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன், சோமு – பழனியம்மாள் தம்பதியைத் தனது முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து, ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள பணமதிப்பிருந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாகத் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.25 ஆயிரம் வழங்கினார்.  பழைய ரூபாய் நோட்டுக்களை முன்னோடி வங்கி மேலாளர் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆட்சியரின் இந்த மனிதாபிமானம் நிறைந்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

– லெட்சுமி பிரியா