அடாவடி அபார்ட்மென்ட் வாசிகள் .. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…

Must read

அடாவடி அபார்ட்மென்ட் வாசிகள் .. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் என்பவரின் மகன் ஆண்டனி குரூஸ். ஆண்டனி பெயின்டிங் வேலை செய்து வருகிறார்.  இவர் சுங்கம் பகுதியில் உள்ள மெட்ரோ பார்க் எனும் அப்பார்மென்ட்டில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அந்த அப்பார்ட்மென்ட் மேலாளர் விவேக் மற்றும் மோகன் ஆகியோர் அந்த வளாகத்தில் உள்ள ஓர் மின்கம்பத்தில் பெயிண்ட் அடிக்குமாறு அந்தோணியை வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் ஆண்டனி வேண்டாம் என மறுத்துள்ளார். ஆனாலும் அபார்ட்மென்ட் நிர்வாகிகளின் வற்புறுத்தலின் பேரில் டிரான்பார்மரில் ஏறி பெயிண்ட் அடிக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.  உடனே அருகில் இருந்தவர்கள் ஆண்டனி குரூஸை அருகில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆண்டனி குரூஸ் கூறுகையில், “ஒரு வாரமா அந்த அப்பார்ட்மென்ட்லதான் வேலை செஞ்சுட்டு இருந்தேன். கரண்ட் கம்பி மேல ஏற சொன்னாங்க. அதுல கரண்ட் வரும், அதனால ஏற மாட்டேனு சொன்னேன். அவங்க, `அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ ஏறு’னு சொல்லிட்டே இருந்தாங்க. வேற வழியில்லாம ஏறினேன். ட்ரான்ஸ்ஃபாமர் வெடிச்சு விழுந்துட்டேன்” என்கிறார் பரிதாபமாக.

ஆண்டனி குரூஸ்க்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.  இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆண்டனிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் விவேக், மோகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

– லெட்சுமி பிரியா

More articles

Latest article