ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் நாளை ஒருநாள் மட்டுமே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக  பிரசாரம் மேற்கொள்கிறர். அங்கு நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு,  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ் பெறும் பணி முடிவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டள்ளது. அங்கு மொத்தம்  77 பேர் களத்தில் உள்ளனர்

இதையடுத்து  வரும் (பிப்ரவரி)  27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்காக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.  அவர்கள் வாக்களிக்க மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதிர்ல, 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க, 260 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு கூடுதலாக போலீசாருடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த பதற்றமான வாக்குசாவடிகள் முழுவதும் சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மற்ற வாக்குச்சாவடிகளில் தேர்தல் அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தல்லில் 77 பேர் போட்டியிடுவதால் இந்த இடைத்தேர்தலில் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1 கட்டுப்பாட்டு கருவி, 1 வி.வி.பேட் கருவி பயன்படுத்தப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் காலை 11 மணி முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.   இதனைத் தொடர்ந்து 27-ந் தேதி வாக்குப்பதிவு அன்று  காலை 6 மணிக்கு அந்தந்த முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெறும். பின்னர் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு முடிந்ததும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அறைகளில் பெட்டிகள் வரிசையாக வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். இதனைத்தொடர்ந்து அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வீடியோ மூலம் கண்காணிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒரு அறையில் 10 மேஜைகளிலும் மற்றொரு அறையில் 6 மேஜைகளிலும் எண்ணப்படுகிறது. அன்று மாலை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அங்கு ப றக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் (24, 25) பிரசாரம் செய்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகள் காரணமாக,  நாளை (25ந்தேதி)  ஒருநாள் மட்டுமே பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை ஒருநாள் மட்டும் காலையில் இருந்து மாலை வரை பிரசாரம் மேற்கொள்கிறர்.

நாளை (25ந்தேதி)  மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அஙுகு  25-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதே போல் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், துரை வைகோ ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இதே போல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா மாநில தலைவர்அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் பிரசாரம்செய்தனர். எடப்பாடி பழனிசாமி நாளை தனது 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். மேலும் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். நடிகை விந்தியாவும் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தார். இன்று மாலை அவர் 3-வது நாளாக அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.