சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தமிழகஅரசு சார்பில் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஆனால், அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், அதிகாரிகள் மட்டுமே மரியாதை செய்தனர். அதுபோல ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார்.

 

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்  அவரது புகைப்படத்தை வைத்து அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.  புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, டெல்லி, அந்தமான்  உள்ளிட்ட பகுதிகளிலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.  பல்வேறு இடங்களில் அதிமுக தலைவர்கள் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கின்றனர்

ஓபிஎஸ் தரப்பினர், சசிகலா, அமமுகவினர் என பலரும்  தனித்தனியாக ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்,

ராயப்பேட்டை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடுகிறார்.

இந்த நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓபிஎஸ், சிலையின் கீழே  அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பிறகு அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.