வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின்

Must read

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன தொடங்கியது. 24ந்தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில் நேற்று முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இன்று 2வது நாளாக  விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது,  பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 20 விழுக்காட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு வழங்கப்பட்டிருக்கிறது. இதைச் செயல்படுத்த மருத்துவர் ராமதாஸ் கடிதம் அளித்தார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கரோனா தொற்றைக் குறைக்க இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர் கூறிய விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்து பேசி விரிவாக ஆய்வு நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

More articles

Latest article