சென்னை

முதல்வர் மு க ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்ள உள்ளார்.

வரும் 25 ஆம் தேதி முதல் நாள் நிகழ்வாகத் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் நாகை மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

அங்கே உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை துறைவாரியாக ஆய்வு செய்கிறார். பிறகு 2-வது நாள் 26-ந்தேதி காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

பிறகு 27-ந்தேதி நாகை எம்.பி. செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார். முதல்வர் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை மறுநாள்  இரவு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார்.

பிறகு சாலை மார்க்கமாக வேளாங்கண்ணி புறப்பட்டுச் சென்று அங்குள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார். பின்னர் 25-ந்தேதி சுற்றுப்பயணத்தைத் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்குகிறார். பின்னர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 27-ந்தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு நாளை மறுநாள் மற்றும் வருகிற 27-ந்தேதி ஆகிய இரு தினங்களிலும் திருச்சியில் டிரோன்கள் பறக்கத் திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் தடை விதித்துள்ளார். நாகை திருவாரூர் மாவட்டங்கள் முதல்வர் வருகையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டு வருகிறது.