விஜயவாடா

ஆந்திர முதல்வரின் தங்கை ஒய் எஸ் ஷர்மிளா தலைமைச் செயலகத்தை முற்றுகை இடப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஆந்திராவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அண்மையில் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிறகு ஆந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஷர்மிளா நியமனம் செய்யப்பட்டார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி காவல்துறையினர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைத்தனர்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அம்பாபுரத்தில் உள்ள முன்னாள் எம்.பி., ராமச்சந்திர ராவ் வீட்டிற்கு செல்ல காரில் புறப்பட்டு வந்தார். அப்போது காவல்துறையினர் ஷர்மிளாவின் காரை பின்தொடர்ந்ததால், ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.

விஜயவாடாவில் இருந்து கட்சி தொண்டர்களுடன்  புறப்பட்ட ஒய்.எஸ்.ஷர்மிளாவை காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்தபோது தொண்டர்கள் அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர். இதையொட்டி அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒய்.எஸ்.ஷர்மிளாவின் போராட்டத்தைத் தடுக்க அவரை வீட்டுக் காவலில் வைக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முயற்சி செய்து ஷர்மிளாவின் வீட்டுக்கு வெளியே காவலர் குவிக்கப்பட்டனர். நேற்று ஷர்மிளா வீட்டுக்கே போகாமல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தங்கினார். இன்று அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.