சென்னை

நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முதல் தற்போது வரை சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.  இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னை மாநகராட்சி மழை குறித்த புகார்கள் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது மழைநீர் வெள்ள பாதிப்பு தொடர்பாகக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்திட வேண்டும் என்றும், மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி மின் விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.