சென்னை: கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  தென் மாவட்டங்களில்   – மீட்பு பணிக்கு வருமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்து வருகிறது. நேற்று (டிசம்பர் 17) அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்து வருகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்  காயல்பட்டினத்தில் 93 செ.மீ. மழை பெய்துள்ளது. 1992க்கு பிறகு பெய்துள்ள  பேய்மழை என பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் சூழலை கருத்தில் கொண்டு 4 மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து போக்குவரத்து நீர் சூழ்ந்துள்ளதால் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற மாவட்டங்களில் இருந்து மீட்பு படையினர், தூய்மை பணியாளர்கள் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 668 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு காயல்பட்டினத்தில் மட்டும் 93 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதன்படி, அந்த பகுதியில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை காட்டிலும், அதிகமான மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். 1992 இல் காக்காச்சி (மாஞ்சோலை)-யில் மதிவான பதிவான 965 மில்லி மீட்டர் மழைக்கு அடுத்த இரண்டாவது அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.

பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதோடு, இன்று பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அதில் பயணம் மேற்கொண்ட மக்கள் வீடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

தாழ்வான பகுதியில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 663 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக மூலக்கரைப்பட்டியில் 59 செ.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு இடங்களிலும் 35 செ.மீ., மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் 42 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 41 செ.மீ., சேரன்மகாதேவியில் 40 செ.மீ., மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு உதவுமாறு திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்  பதிவில், “அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல், அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் – நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன்” என கூறியுள்ளார்.

தென்மாவட்டங்களை புரட்டிப்போடும் வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் மிதக்கும் ஐகிரண்டு மருத்துவமனை – வீடியோஸ்