சென்னை:

சென்னை – மும்பை மற்றும் திருப்பதிக்குச் சாலை மார்க்கமாகச் செல்லும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்க சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை  அகலப்படுத்தப்பட உள்ளது.

சென்னையிலிருந்து மும்பை மற்றும் திருப்பதி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் 144 கி.மீ. தொலைவு என்பது சென்னை-சூரத் எக்ஸ்பிரஸ் விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சாலையானது இது ரேனிகுண்டா, மகபூப்நகர், அக்கல்கோட், சோலாப்பூர் மற்றும் நாசிக் வழியாகச் சென்று, சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான தூரத்தைக் குறைந்தது 120-130 கி.மீ. அளவுக்குக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை எண் 205ஐ, திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லை வரை, இரண்டு வழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது.  மேலும், தமிழக-ஆந்திர எல்லையில் இருந்து திருப்பதி வரையிலான நான்கு வழிச்சாலை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படு அதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது தயாரித்து வருகிறது.

இதில் “சாலை மேம்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டு வரும் விரிவான திட்ட அறிக்கையில், தேவைக்கேற்ப பெரிய மற்றும் சிறிய பாலங்களின் கட்டுமானமும் அடங்கும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் முழுவதுமாக அல்லது பகுதியளவு சாலை கட்டுப்படுத்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது கிடைத்த தகவலில், கட்டுப்படுத்தப்பட்ட விரைவுச் சாலைக்கு, சேவைப் பாதையைத் தவிர்த்து, நெடுஞ்சாலையின் இருபுறமும் வேலி அமைக்க வேண்டும்.

ஆனால் பாடியிலிருந்து திருநின்றவூர் வரை வேலி போடுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. சாலையின் வடிவமைப்பு தற்போது இறுதி செய்யப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.

சென்னை பாடி – கொரட்டூர் சந்திப்பில் துவங்கும் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் தற்போது திருநின்றவூர் வரை 22 கி.மீ.க்கு நான்கு வழிச்சாலை உள்ளதை மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். தவிர திருநின்றவூர் – திருவள்ளூர் இடையே 17.5 கி.மீ. தூரத்தை அகலப்படுத்தும் பணிகள், 304 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் நிலையில், அடுத்த செப்டம்பருக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு தமிழக அரசு, பாடி – திருநின்றவூர் வரை சாலை விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்காக ரூ.152 கோடி ஒதுக்கப்பட்டு, மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம், நில உரிமையாளர்களுக்குக் கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எனவே, நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.

இந்தப் பணிகள் முடிந்ததும், சென்னையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் திருப்பதி செல்ல திருவள்ளூர் நகரை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து எளிதாகச் செல்லலாம். நான்கு வழிச்சாலைகள் தோழூர், தண்ணீர்குளம் மற்றும் செவ்வாய்ப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள புறவழிச்சாலைகளுடன் இணைக்கப்படும்.