காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம்  இன்று (ஏப்ரல் 24ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானாகிய ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, 15 நாட்கள் நடைபெறும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில்  சித்திரை உத்திர பெருவிழா இன்று தொடங்கி உள்ளது.  இதையொட்டி, தினமும் மாலை 6:00 மணிக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அரங்கில், வாரியார் ஆன்மிக தொண்டு மன்றத்தினரின், திருமுறை, சொற்பொழிவு, இசை, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் வரும்  இன்று (24ம் தேதி)  காலை 5:30 மணிக்கு கொடியேற்றத்துடன்  தொடங்கியது. சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு கச்சபேஸ்வரருக்கும் சுந்தராம்பிகை அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தடியில் எழுந்தருளச் செய்தனர். இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாக சாலை அமைத்து தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து சிவபெருமானின் வாகனமாகிய நந்தியின் உருவம் பொறித்த கொடியை தங்க கொடிமரத்தில் ஏற்றி வைத்து சித்திர உத்திர பெருவிழா உற்சவத்தை துவக்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர், சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த திருவிழா , மே 8ம் தேதி ஊஞ்சல் உத்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவையொட்டி தினமும் காலை 7:30 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பல்வேறு வாகனத்தில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். இதில், நான்காம் உத்சவமான வரும் 27ம் தேதி இரவு இடப வாகன உத்சவமும், ஐந்தாம் நாளான 28 ம் தேதி காலை அதிகார நந்தி சேவையும், இரவு திருக்கல்யாண உத்சவமும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான, ஏழாம் உத்சவமான ஏப்ரல்  30ம் தேதி காலை தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உத்சவமான மே 2ம் தேதி இரவு முருக்கடி சேவையும், 10ம் உத்சவமான மே 3ம் தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 12ம் நாள் உத்சவமான மே 5ம் தேதி பஞ்சமூர்த்திகள் உத்சவமும் நடக்கிறது.

சித்திரை உத்திர பெருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை,மாலை வேளைகளில் சூரியபிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், திருக்கயிலைக் காட்சி, நாக வாகனம், இடப வாகனம், அதிகார நந்தி சேவை, சப்பரம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வர உள்ளார்.

. சித்திரை உத்திர பெருவிழா உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். கொடியேற்ற உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் காலை நேரத்திலேயே கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

[youtube-feed feed=1]