1982ம் ஆண்டு மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் வெளியான’ டிஸ்கோ டான்ஸர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜிம்மி ஜிம்மி ஜிம்மி … ஆஜா ஆஜா ஆஜா’ என்ற பாடல் தற்போது சீனா முழுவதும் வைரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சீனாவின் மாண்டரின் மொழியில் ‘ஜி…ம்..மி’ என்பதற்கு ‘எனக்கு அரிசி தா’ என்று பொருள்.

தற்போது கொரோனா காரணமாக கடுமையான கட்டுப்பாடு தொடரும் நிலையில் அங்கு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதோடு உணவுப் பொருள் வாங்குவதற்குக் கூட வழியில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனை காரணம் காட்டி சீனாவில் ‘டௌயின்’ என்று அழைக்கப்படும் டிக்-டாக் செயலியில் பப்பி லஹரி இசையில் வெளியான இந்தப் பாடலை பலரும் பாடி பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/ananthkrishnan/status/1586992843096297473

இந்தியர்களைப் போல் சேலை அணிந்து பொட்டு வைத்து டான்ஸ் ஆடும் இவர்கள் சீன அரசிடம் அரிசி கொடு என்று ‘ஜிம்மி ஜிம்மி ஜிம்மி … ஆஜா ஆஜா ஆஜா’ பாடலை டிக்-டாக் செய்துவருகின்றனர்.

இந்தப் பாடல் வெளியான காலகட்டத்தில் இந்தியா மட்டுமன்றி அப்போதைய சோவியத் யூனியனிலும் ரஷ்யர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட பாடலாக இருந்தது.

டிஸ்கோ டான்ஸர் படம் 1985 ம் ஆண்டு பாடும் வானம்பாடி என்ற பெயரில் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டது ‘ஜிம்மி ஜிம்மி ஜிம்மி … ஆஜா ஆஜா ஆஜா’ தமிழில் ‘அன்பே அன்பே அன்பே… பாடும் பாடல் எங்கே’ என்று இடம்பெற்று அதுவும் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.