சென்னை: தமிழக சட்டபேரவை சிறப்பு கூட்டம் இன்று கூடிய நிலையில், ஆளுநருக்கு எதிராக  பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் வகையில் பேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், ஆளுநர் பதவி குறித்து கடுமையாக விமர்சனம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில்,  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 11 மசோதாக்களை கடந்த 13ம் தேதி ஆளுநர் திருப்பி அனுப்பினார். எவ்வித காரணமும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளார். அரசமைப்புச் சட்ட உறுப்பு 200-ன் கீழ் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று  கூறினார்.

இந்த  தீர்மானத்துக்கு, திமுக ஆதரவு கட்சிகள் மற்றும்,  தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பேரவையில் பேசிய சபாநாயகர்,  ஆளுநர் குறித்து விமர்சித்து பேரவையில் பேச அனுமதி கிடையாது என்று கூறினார்.