சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிரம்பரம் குடும்பத்தினர் கட்டியுள்ள வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார்.
இரண்டுநாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முன்ன்னதாக இன்று காலை சென்னையில் இருந்து காலை 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். அங்கு அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், கே.என்.நேரு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு 11.30 மணிக்கு வந்தார்.
சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல் காரைக்குடி மாநகரம் சார்பில் கல்லூரி சாலை ராஜீவ்காந்தி சிலை அருகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினை ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் உள்பட குடும்பத்தினர், பல்கலைக்கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அத்துடன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்ப சொந்த நிதியாக ரூ.12 கோடி நிதியில் 30,450 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள லட்சுமி வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.