சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாளான பிப்ரவரி  5-ந்தேதி அரசு விடுமுறை  என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்ஏவும், மூத்த தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு அடுத்த மாதம் 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி, ஏற்கனவே தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த இடைத்தேர்தலில், எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில்,   திமுக, நாம் தமிழர் கட்சி கட்சி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.  அத்துடன் சுயேட்சையாக 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.  அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்களும் பம்பரமாக சுழன்று களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் முழு அளவிலான வாக்கு சதவீதத்தை எதிர்நோக்கி அரசு விடுமுறை அளித்துள்ளது.