சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.  பாராளுமன்றத்தில் இன்று திமுக எம்.பி.க்கள் இந்த விவகாரம் தொடர்பாக அவையை முடக்கிய நிலையில், முதல்வரும் கடிதம் எழுதி உள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 55 பேரை ஏற்கனவே கைது செய்த இலங்கை கடற்படை இன்று மேலும் 13 பேரை கைது செய்துள்ளது. இதுவரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 ஆக உயர்ந்துள்ளது. இதை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளது. இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்ளை உடனே  விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களையும், 75 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தை திமுக எம்.பி-க்கள் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.