மதுரை: தென்தமிழகத்தில் முதன்முறையாக எலும்பு வங்கியை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு அடுத்த 2 வாரம் மட்டும் கொடுரோனா தடுப்பூசி முகாம்களை, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி உள்ளதாக  தெரிவித்து உள்ளார்.

மதுரையில் கொரோனா தொற்று பரவல், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை மாவட்டம் அரசு ராஜாஜி மருத்துவமனை- பாலரெங்காபுரம் மண்டல புற்றுநோய் மையத்ததில் மேம்படுத்தப்பட்ட வெளிப்புற கோபால்ட் 60 அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையம் துவக்கி வைத்தார். தொடர்ந்து,  எலும்பு வங்கி, முதுகு தண்டுவட காய படுக்கைப்புண் சிகிச்சை மையம், மாடித்தோட்ட வளாகம், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி மையம் , சித்த மருத்துவ நலவாழ்வு மையம் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.

மேலும், அங்கு நடைபெற்ற எலும்புகள் தானம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், எலும்புகள் தானம் வழங்கப்படுவதால் விபத்து மற்றும் எலும்பு சம்பந்த மான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெற முடியும் என கூறியதுடன், நர்சிங் பாரா மெடிக்கல் தொடர்பான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அடுத்த 2 வாரங்களுக்கு சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது, வீரம் நிறைந்த விவேகம் கொண்ட மதுரை மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் தொடங்க மத்திய அரசிடம்  நானும், முதல்வரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, கட்டுமானப்பணிகளை விரைவில் தொடங்கப்படும் என  மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இன்று (21-12-2021) மதுரை மாவட்டத்தில் எலும்பு அறுவை சிகிச்சைகளுக்கு ஏற்றவாறு தானமாகப் பெறப்படும் எலும்புகளைச் சேகரிக்கும் வகையில் புதிதாக எலும்பு வங்கியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் பி.ஃபார்ம் உள்ளிட்ட 19 வகையான மருத்துவப் படிப்பிற்காகத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, பல துறை சார்ந்த பணிகளைத் தொடங்கி வைத்தார்.

“உடல் உறுப்புகள் தானத்தில் தமிழகம் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ஏற்றவாறு எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. எலும்புகளைப் பதப்படுத்துதல், மீட்டெடுத்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்காக மதுரையில் எலும்பு வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விபத்து மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் முறிவு ஏற்பட்டு மீண்டும் இணைக்க முடியாத எலும்புகள் அனைத்தும் விபத்து ஏற்பட்ட 14 மணி நேரத்திற்குள் சேகரிக்கப்படும். அவை மதுரையில் உள்ள வங்கியில் 5 ஆண்டுகள் சேகரிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுப் பயன்படாத அல்லது காலாவதியான எலும்புகள் உரிய முறையில் அழிக்கப்படும்.

உடல் உறுப்புகள் தானம் வழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதனிடையே, விபத்து மற்றும் எலும்பு சம்பந்தமான புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் தானமாகப் பெறப்படும் எலும்புகளால் பயன்பெற முடியும்”.

இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.