டையம்

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் மற்றும் அவர் மனைவி செல்லம்மாள் சிலையைக் கடையத்தில் நிறுவத் தமிழக அரசு அனுமதி அளிதுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த செல்லம்மாளை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருமணம் செய்து சுமார் 2 ஆண்டுகள் கடையத்தில் வாழ்ந்துள்ளார். சேவாலயா என்னும் நிறுவனம் கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலையை நிறுவ வேண்டும் என சிலையைத் தயார் செய்து சுமார் 4 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.

தமிழக அரசு கடையம் வஉசி தெருவில் சேதமடைந்து காணப்படும் பழைய நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு அங்கு சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான 7 அடி உயரத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலையை நிறுவ அனுமதி வழங்கியுள்ளது.

சேவாலயா நிறுவனர் முரளிதரன், ”ஆட்சியரிடம் ஏற்கனவே கடையத்தில் பாரதியார் – செல்லம்மாள் சிலையை நிறுவ மனு கொடுத்து இருந்தோம்.  ஆனால் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் வருடங்கள் கடந்தன. சென்ற ஜுன் மாதம் கடையம் வருகை புரிந்த சபாநாயகர் அப்பாவு சிலையை நிறுவப் பரிந்துரை செய்ததால் தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

கடையத்தில் உள்ள பழைய நூலகக் கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிதாகக் கலைநயத்துடன் கூடிய கட்டிடத்தை உருவாக்கி அதன் நடுவில் பாரதியார்-செல்லம்மாள் சிலையை நிறுவுவதற்கான திட்டங்கள் ஆராயப்பட்டது.

வரும் பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே சபாநாயகர் அப்பாவு தலைமையில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.  வரும் ஜூன் 27ம் தேதி பாரதியாரின் 125வது மண நாள் விழாவில் சிலை திறப்பு விழாவைத் தமிழக முதல்வர் தலைமையில் நடக்க முயற்சி செய்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.