சென்னை: கக்கன் குறித்த திரைப்படத்தில் ஒலிநாடா, டிரெய்லரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கான விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “கக்கன்” திரைப்படத்தின் ஒலிநாடா மற்றும் முன்னோட்ட காட்சியை (Trailer) வெளியிட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கக்கன்.  எளிமைக்கு பெயர் போன கக்கன் காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர்.  தமிழ்நாட்டில் நேர்மையின் அடையாளமாக குறிப்பிடப்படுகிறவர் கக்கன்.  தமிழகத்தில் 3 முறை அமைச்சராக இருந்துள்ளார். இவரின் 116-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கடந்த ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.   அப்போது நடைபெற்ற  விழாவில் கக்கனில் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

கக்கன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை  சங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜோசப் பேபி என்பவர் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். பிரபு மாணிக்கம், ரகோத் விஜய் இயக்குகிறார்கள். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.  தேனிசை தென்றால் தேவா இசை அமைக்கிறார்.  கக்கன் பிறந்த நாள் அன்று படத்தை வெளியிடும் திட்டத்தோடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சென்னை காமராஜர் மண்டபத்தில் இன்று நடைபெற்ற விழாவில், கக்கன்  படத்தின் ஒலிநாடா மற்றும் டிரெய்லர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த  நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றம் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திரு.ஜே.எம்.எச். அசன் மௌலானா, மருத்துவர் நா. எழிலன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு. கோபண்ணா, கக்கன் அவர்களின் மகள் திருமதி கே. கஸ்தூரி பாய், பேத்தியும் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவருமான திருமதி எஸ். ராஜேஸ்வரி, இ.கா.ப., இசையமைப்பாளர் திரு. தேவா, தயாரிப்பாளர் திரு. ஜோசப் பேபி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.