சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நபரள தென்காசியில் நலத்திட்ட உதவிகள் இன்று மாலை ரயில் மூலம் புறப்படுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகளும், திமுகவினர் செய்து வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் முதலமைச்சர், அப்போது பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாளை தென்காசி செல்கிறார். அதற்காக  இன்று  இரவு 7.30 அளவில் புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக தென்காசிக்கு புறப்படுகிறார். நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர், காலை உணவுக்கு பின்னர் விழா நடைபெற உள்ள இடத்திற்கு புறப்படுகிறார்.

தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில்,  பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் சுமார் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  கடையநல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். ராஜபாளையம் செல்லும் வழி நெடுகிலும் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் திரண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  ஏற்பாடு செய்துள்ளார்.

முதலமைச்சர் தென்காசி வருகையையொட்டி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தென்மண்டல ஜ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் ரெயில் நிலையம் முதல் குற்றாலம், விழா மேடை மற்றும் மாவட்ட எல்லை வரையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக சென்று ஆய்வு நடத்திய டிஜிபி சைலேந்திரபாபு இன்று தென்காசி சென்று,  விழா நடைபெற உள்ள இடம் உள்பட அனைத்து இடங்களையும்  பார்வையிடுகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து கார் மூலமாக நெல்லையில் உள்ள சுற்றுலா மாளிகையில் சிறிதுநேரம் தங்கிவிட்டு அங்கிருந்து தென்காசிக்கு புறப்பட்டு செல்கிறார்.