சென்னை: சந்திரயான்3  திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசிவாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது,  ”தமிழ்நாடு வந்தால் சொல்லுங்கள் , நானே நேரில் வந்து சந்திக்கிறேன் “ என கூறினார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக  ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம்,  முதலில் பூமியை நீல்வட்டப்பாதையில் சுற்றி வந்தது. பின்னர்,   ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆகஸ்டு -5 ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான் 3 நுழைந்தது. பின்னர் நிலவை சுற்றிவந்த சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 17-ஆம் தேதி உந்துகலனில் இருந்து விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டு தனித்தனியாக சுற்றி வந்தனர். இதையடுத்து, பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரை தரையிறக்கும் வகையில், அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. ஆகஸ்டு 20ந்தேதி நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. x 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட பணியாக லேண்டரை தரையிறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். அதற்கான 48மணி நேர கவுண்டன் தொடங்கப் பட்டு  நேற்று (ஆகஸ்டு 23ந்தேதி) மாலை 5.44 மணி அளவில் சந்திரயான் 3-ன் கடைசி கட்ட பணிகள் தொடங்கியது. படிப்படியாக தரையிறக்கப்பட்ட லேண்டர், திட்டமிட்டபடி, மாலை 6.04மணிக்கு வெற்றிகரமாக நிலவில் கால் பதித்தது.  நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்து சாதனை படைத்தது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாடினர்.

இந்த நிலையில்,  நிலவில் கால்பதித்த விக்ரம் லேண்டர், “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்” என்று சந்திராயன் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது என தகவல் அனுப்பியது.

உலக சாதனை படைத்த சந்திரயான்3 திட்ட இயக்குனராக கடந்த 2019ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி பணியாற்றி வருகிறார். அவரது தலைமையில் சந்திரயான்3 திட்டம் வெற்றிபெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீர முத்துவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரயான்3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலை தொலைபேசி மூலம்  தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தார். அப்போது,   வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்தற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் உள்ள அவரது வீரமுத்துவேலின் தந்தை தொலைக்காட்சியை பார்த்து நெகிழ்ந்து போனதை நினைவு கூர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்தால் மறவாமல் தனக்கு தகவல் சொல்ல வேண்டும் எனவும் தான் நேரடியாக வந்து சந்திப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.