சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  தலைவராக நீடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் என கே.எஸ்.அழகிரி குறித்து  காங்கிரஸ் எம்எல்ஏ  செல்வபெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  மாற்றப்படுவார் என சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து தலைவர் பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்ததை எம்எல்ஏ கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் புதிய தலைவர்  பெயர்கள் அறிவிக்கப்படும் என கடந்த சில நாட்களாக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், தலைவர் பதவியை கைப்பற்ற பலர் திரைமறைவு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இதற்கிடையில், கே.எஸ்.அழகிரி தனது ஆதரவு எம்.பி., எம்எம்எல்ஏக்களுடன் பெங்களூரு சென்று, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினர். கேஎஸ்அழகி தலைவர் பதவியை தக்க வைக்க முயற்சி செய்வதாக கூறப்பட்டது.

இதற்கிடையில்,  தலைவர் பதவிக்கு ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், செல்வபெருந்தகை  உள்பட பலர் போட்டியிடுவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்த கேள்விக்கு பதில் கூறிய, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சி தலைமையிடம் மாநில தலைவர்  பதவி குறித்து விவாதிக்கவில்லை என்றவர்,  ‘பொறுப்பில் தொடர்ந்தாலும் மகிழ்ச்சி தான்… தலைவர் பொறுப்பு வேறொருவருக்கு வழங்கப்பட்டாலும் மகிழ்ச்சி தான். யார் தலைவராக இருந்தாலும் 2024 மக்களவை தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கட்சி தலைவர் பதவி குறித்து செய்தியாளர்களிடம் கூறிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என்பது கே.எஸ்.அழகிரியின் விருப்பம், ஆனால், அதை முடிவு செய்து கட்சி தலைமை என்று கூறியதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் தலைமை குறித்து  காரிய கமிட்டி அறிவிக்கும் என்றார். மேலும்,  தற்போது இது முக்கியமில்லை என்றவர் கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.