சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், அதிக வெப்பத்தை உருவாக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. சுமார் 1 மாதம் காலம் தொடரும் இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதையும், வெயிலில் நடமாடுவதையும் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்று முதல் தமிழ்நாட்டில் ஆரம்பமாகிறது. அதாவது,  சூரியன் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணத்தை தொடங்கும் காலம் அக்னி நட்சத்திர காலமாகும். பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில் தான் என்பதால், இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள்.   சித்திரை மாதம் கடைசி 8 நாட்கள் தொடங்கி வைகாசி மாதம் 15ஆம் தேதி வரைக்கும் ( மே 4 முதல் 28 வரை) அக்னி நட்சத்திர காலமாகும். இந்த நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோடை மழையும் இந்த கால கட்டத்தில் பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21-இல் தொடங்கி வைகாசி 15-ல் முடிவடையும். அதன்படி, இன்று தொடங்கும் அக்னி நட்சத்திரம் வெயில், மே 28ந்தேதி முடிவடைகிறது. இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்குமாறும், அடிக்கடி நீராகாரம் அருந்தும்படியும் மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில்,  திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற சுப காரியங்களை செய்யலாம். மேலும் இந்த காலகட்டத்தில் அக்னி பகவானை வழிபாடு செய்து நீர் தானம், அன்னதானம், கால் அணிகளை தானம் கொடுப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் அக்னி தேவனின் ஆசிர்வாதத்தை பெற முடியும்.

அதேவேளையில்,  புது வீடு புகுதல், பால் காய்ச்சுதல், செடி கொடிகளை வெட்டுதல், தலை முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், கிணறு வெட்டுதல் , மரம் வெட்டுதல் விதை விதைத்தல், வீடு பராமரிப்பு பணிகளில் தொடங்குதல், நெடுந்தூரப் பயணம் ,பூமி பூஜை போன்றவற்றை செய்யக்கூடாது என்பது ஐதிகம்.

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குவதை முன்னிட்டு,  சென்னை  வானிலை ஆய்வு  மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது. நேற்றைய தினம் தமிழகத்தில் 4 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° – 42° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39° – 40° செல்சியஸ், பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36° – 40° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 25° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 06.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். 08.05.2024 மற்றும் 09.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 03.05.2024 மற்றும் 04.05.2024 தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–44° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

இன்றைய தினம் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 05.05.2024 மற்றும் 06.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று முதல் 06.05.2024 வரை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

இவ்வாறு கூறி உள்ளது.

அக்னி நட்சத்திரம்: பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்த்து  விழிப்போடு இருங்கள்…

காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில்  காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள்.

வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.

ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். ஐஸ் போடாமல் பழச்சாறு , மற்றும் இளநீர் அருந்தலாம்

இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்.

மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள் ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை இரத்தம் நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு.

அதனால் வெயிலில் இருந்து வந்தவுடன்  உடனே தண்ணீர்   அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும். ஆபத்தில் இருந்து தப்பலாம்.