சென்னை: ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் உறுதி கூறியுள்ளார்.

கடந்த திமுக ஆட்சியின்போது, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில், ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் பிரமாண்டமான தலைமைச்செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டிடங்கள் கட்டப்பட்டன.  ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஒமந்தூரார் தலைமைச் செயலகத்தை, பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஓமந்தூரார் வளாகம், மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த பன்னோக்கு மருத்துவமனையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச்செயலமாக மாற்றப்படும் என தகவல்கள் பரவின. அதற்கேற்றார்போல,  தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே, கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது இந்தப் பகுதியினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆய்வு செய்தபோது, இந்த உயர் தர மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டவுடன், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அங்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகம் மாற்றப்படும் என்றும் செய்திகள் வந்தன.

இநத் நிலையில், கடந்த வாரம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் தனது அறிக்கை மூலம், இடநெருக்கடி காரணமாக, தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.  இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும் சில நிகழ்வுகள், தலைமைச்செயலகம்  இடம்மாறுவதற்கான ஆரம்பம் என்பதை பறைசாற்றின. அதாவது, தலைமைச் செயலகத்தில் உள்ள  உணவுத் துறை செயலர் அறையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதாகவும், கோப்புகள் நனைந்ததாகவும் கூறப்பட்டன.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமுக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.  ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அங்கிருந்து மாற்ற முயற்சிக்கும் தி.மு.க. அரசின் முடிவு என கூறப்பட்டது. ஜெயலலிதா போல, ஸ்டாலினும் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படக்கூடாது சமூக ஆர்வலர்கள் கூறியிருந்தனர்.  

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது என தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பான கேள்விகளுக்கு  500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன்; ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது என்று மீண்டும் தெளிவுபடுத்தினார்.

இதைத்தொடர்ந்து டெங்கு பரவல் குறித்த கேள்விக்கு பதில் கூறியவர், தமிழ்நாட்டில்  டெங்குவால் எந்த பாதிப்பும் இல்லை; இறப்பும் இல்லை என கூறினார்.