சென்னை:  சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட 4 மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதிய வேளை) இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அடிக்கடி மழை பெய்து வருவதால், குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

ஆகஸ்டு 24ந்தேதி முதல்  29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முற்பகல் மற்றும் மதிய வேளையில்  இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடிக்கடி பெய்யும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில்  (ஆகஸ்டு 23ந்தேதி நிலவரப்படி) குடிநீர் ஏரிகளில் உள்ள நீர் குறித்து குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.  அதன்படி, ஆந்திரா கண்டலேறு அணையிலிருந்து  தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணாநதி நீர்திறப்பு 900 கனஅடியாக உள்ளது. கிருஷ்ணா நதி நீர்வரத்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு நீர்வரத்து வினாடிக்கு 153 கன அடியாக அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 156 கனஅடியில் இருந்து 1,280 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2,720 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மொத்தம்  3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 1931 மில்லியன் கன அடியாக உள்ளது.‘ அணையில் இருந்து  159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 112 மில்லியன் கன அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 347 மில்லியன் கன அடியாக உள்ளது. அங்கிருந்து  11 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 130 கனஅடியில் இருந்து 460 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில் 1,837 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக குழாய் மூலமாக வினாடிக்கு 40 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.