சென்னை: மார்ச் 1, 3 தேதிகளில் மதுரை வழியாக செல்லும் சென்னை ரெயில்கள் முழுவதுமாக ரத்து ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தெற்குரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- மதுரை-திருப்பரங்குன்றம்-திருமங்கலம் ரெயில் வழித்தடத்தில் இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மார்ச் 1 முதல் பல்வேறு தேதிகளில் முக்கிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரெயில் (வண்டி எண்: 12605), மதுரை செல்லும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்: 22623), மார்ச் 3-ந்தேதியும், நாகர்கோவில் வாராந்திர ரெயில் (வண்டி எண்: 12667) மார்ச் 2-ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்: 20601) மார்ச் 1, 3 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூருக்கு மதுரையில் இருந்து செல்லும் அதி விரைவு ரெயில் (வண்டி எண்: 22624) மார்ச் 2-ந் தேதியும், காரைக்குடியில் இருந்து செல்லும் பல்லவன் ரெயில் (வண்டி எண்: 12606) மார்ச் 1, 3, 4 தேதிகளிலும், நாகர்கோவிலில் இருந்து செல்லும் ரெயில் (வண்டி எண்: 12668) மார்ச் 3-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-தாம்பரம் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்: 22657, 22658) மார்ச் 1,2 -ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. பெங்களூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்: 17235, 17236) மார்ச் 1 முதல் 3 -ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தேஜஸ் விரைவு ரெயில் மார்ச் 1,3,4,5 ஆகிய தேதிகளில் திருச்சி-மதுரை இடையேயும், வைகை மற்றும் பாண்டியன் விரைவு ரெயில்கள் மார்ச் 1, 2, 3 தேதிகளில் மதுரை- கூடல்நகர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

கூடல் நகரில் இருந்து இந்த ரெயில் புறப்படும். சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் விரைவு ரெயில் வருகிற 28-ந்தேதி முதல் மார்ச் 3 வரை திருச்செந்தூர்- திருச்சி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி- தாதர் விரைவு ரெயில் மார்ச் 2, 3 -ந் தேதிகளில் சேலத்தில் இருந்தும், தூத்துக்குடி-மைசூர் ரெயில் மார்ச் 1, 2 -ந் தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்தும் புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.