மாண்டஸ் புயல் காரணமாக கடற்கரையை ஒட்டிய மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது.

இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை ஒட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் அலுவலகங்கள் இன்று மதியத்துடன் தங்கள் அலுவலகங்களை மூடியது.

ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டதை ஒட்டி சாலைகளில் போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது.

அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டதால் பிற்பகலில் பல்வேறு சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

நகரின் தாழ்வான பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் பேருந்து பயணத்தை தவிர்த்து மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் மூலம் செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் அந்த வழியே போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் புதுவை அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்காததால் அந்த சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.