சென்னை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை மிரட்டி வரும் மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இதனால், நேற்றுமுதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று இரவு அதிவேக சூறைக்காற்றுடன் கனமழையும் இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதுடன், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து,  மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் நாளை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், அதற்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

அதுரபோல  நாளை நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஏற்கனவே நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட கூடிய பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.