சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் கைரேகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்ல, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது நீட் ஆள்மாறாட்ட விவகாரம். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது, நடப்பாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவுகள், நீட் ஆள்மாறாட்ட புகார் குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்கப்பட்டு விட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

நீட் தேர்வு எழுத வந்தபோது அவர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.  பெறப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறப்பட்டது. அவை பின்னர், மாணவர் சேர்க்கையின் போது பெறப்பட்ட கைரேகைகளுடன் ஒத்துப் போகிறதா என்று ஆய்வு நடத்தப்பட உள்ளது என்று கூறியது.

அப்போது நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: 4,250 மாணவர்களின் கைரேகை தொடர்பான விவரங்கள் இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் தற்போதை கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.

அவர்கள் அனைவரின் கைரேகைகளும் பரிசோதித்து பார்க்க வேண்டும். அதாவது, அந்த கல்லூரி முதல்வர் அல்லது இயக்குநர் முன்னிலையில் அவை பரிசோதிக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முழுவதுமாக வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து மருத்துவ கல்லூரிகள் துணைவேந்தர்கள், முதல்வர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியிருக்கிறது.