சென்னை

டிகர் விஜய் சேதுபதி மீதான பெங்களூரு விமான நிலைய தாக்குதல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் சென்னை சைதாப்பேட்டை சேர்ந்த மகா காந்தி என்னும் துணை நடிகர் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்குப் பெங்களூரு விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.  அவர் அப்போது தாம் நடிகர் விஜய் சேதுபதியைச் சந்தித்து அவரை பாராட்டி, கைக்குலுக்கிய போது ஏற்க மறுத்து பொது வழியில் தன்னை இழிவு படுத்தி தாக்கியதாகவும்  சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்.

அவர் ஒரு வழக்கில் விஜய் சேதுபதியை அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மற்றொரு வழக்கில் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாகவும் 2 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தார். இவற்றை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என விஜய் சேதுபதிக்குச் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் 2 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரியும் தனக்கு எதிரான சம்மனையும் ரத்து செய்யக் கோரியும் விஜய் சேதுபதி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத்  தடை விதித்திருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது நீதிபதி சசிக்குமாரிடம் விஜய் சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெங்களூரு எல்லையில் நடந்த சம்பவம் தொடர்பாக இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தாக்குதல் வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி இதை ஏற்று முதலில் தாக்குதல் வழக்கை மட்டும் ரத்து செய்யக்கோரி உத்தரவிட்டதுடன் அவதூறு வழக்கைப் பொறுத்த வரையிலும் வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வெண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.