சென்னை

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நகரில் 92%  மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது., சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இதில் பங்கேற்றார்.  இந்த மாநாட்டுக்கு பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்,

அந்த சந்திப்பில் ராதாகிருஷ்ணன்.

“சென்னை பெருநகர மாநகராட்சியில் 11,516 எண்ணிக்கையிலான 2,674 கி.மீட்டர் மழைநீர் வடிகால்கள் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வரை இருந்தது. இப்போது, 3,480 கி.மீட்டர் மழைநீர் வடிகால்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக எடுக்கப்பட்ட 1,501 கி.மீட்டர் திட்டப்பணிகளில் 1,390 கி.மீட்டர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 92.61 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைவில் நிறைவு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

புதிதாக சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில், கழிவுநீர் அகற்றும் வசதிகள், குடிநீர் வழங்கல் வசதிகள் இல்லாத காரணத்தால் அந்த பகுதிகள் மாநகராட்சி தரத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. அங்கு மின்சாரத்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த பணிகள் நிறைவடைந்ததும், சாலைப் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்கள் தாழ்வான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில், 9 இடங்கள் அதி தாழ்வான பகுதிகளாக உள்ளது. ஆபத்தான மரக்கிளைகள் வெட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. புயல் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்க, 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 16 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க 169 பம்பு செட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

தெரு நாய்களைப் பிடிக்க 16 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு, வெறி நாய்க்கடி நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. நாய்கள் குணமடைந்ததும், நாய் இனக்கட்டுப்பாட்டு விதி 2023-ன்படி பிடித்த இடத்திலேயே விடப்படும். நடப்பாண்டு 11 ஆயிரத்து 220 தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.” 

என்று கூறினார்.