சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும்  என்றும் , வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில்,  அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், வங்க கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றலுத்த தாழ்வு பகுதி , காற்றலுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடஙகளில் கன மழை பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்”

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மற்றும் கன மழை பெய்ய கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.

மேலும்,  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று  கூறியவர்,  அக். 1 முதல் இன்று வரையிலான இயல்பு அளவான 277.5 மி.மீ.-க்கு பதில் 241.7 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.