சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது விசாகப்பட்டினத்திற்குக் கிழக்கே சுமார் 410 கி.மீ தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது. விரைவில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் தமிழகத்தில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இன்று இரவு சுமார் 8 மணி வரை சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.