டில்லி

கொரோனாவால் உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை இந்தியாவில் மொத்தம் 3.87 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதனால் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்.   பல குடும்பங்களில் பொருள் ஈட்டுவோர் மரணம் அடைந்ததால் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.   வேறு சில மாநில அரசுகள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன.  இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம்  இழப்பீடு வழங்குவது குறித்து அரசின் கருத்தை கேட்டது.  இதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், “உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டபடி ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க இயலாது.

கொரோனாவால் மரணம் நிகழ்ந்ததை இயற்கை பேரழிவு எனக் கூற முடியாது.   எனவே இந்த இழப்பீடு விதிகள் கொரோனா மரணத்துக்குப் பொருந்தாது.  இது பெருந்தொற்றால் ஏற்படும் மரணம் என்பதால் அதை வேறு அளவுகளில் கணக்கிட வேண்டும்.  எனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறியது போல் மத்திய அரசால் ரூ.4 லட்சம் இழப்பீடு அளிக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.