டில்லி

சேது சமுத்திர திட்டம் ராமர் பாலத்தை அகற்றாமல் நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

தற்போது இந்தியப் பெருங்கடலின் வழியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு வரும் கப்பல்கள் இலங்கையை சுற்றி வருகின்றன.   இதனால் எரிபொருள் விரயமாவதுடன்.  அதிக நேரமும் ஆகிறது.  அதற்காக சேது சமுத்திரத் திட்டம் அமைக்க அப்போதைய மத்திய அரசு முடிவு செய்து பணிகளை தொடங்கியது.

ஆனால் அந்த திட்டத்தின் மூலம் இந்திய இலங்கைக்கு இடையில் உள்ள ராமர் பாலம் எனவும் ஆடம்ஸ் பிரிட்ஜ் எனவும் அழைக்கபடும் பாலம் இடிக்கப்படும் என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.   அதையொட்டி இந்த திட்டத்தை ராமர் பாலத்தை அகற்றாமல் நிறைவேர்ற வேண்டும் என பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தனது பதிலை அளித்துள்ளது.   அந்த பதிலில், “இந்த திட்டத்துக்காக ராமர் பாலம் அகற்றப் பட மாட்டாது.   அதை அகற்றாமல் வேறு வழியில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்.  அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”  என அரசு தெரிவித்துள்ளது.