சென்னை: தலைநகரின் முக்கிய சுற்றுலா பகுதியான சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை வரை ரோப்கார் சேவை அமைப்பது குறித்து மத்தியஅரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் 10 இடங்களில் 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் சில இடங்களில் ரோப்கார் சேவை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. முதற்கட்டகமா, தமிழகத்தில் பழனி முதல் கொடைக்கானல் வரையிலான 12 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோப் கார் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசின் பங்களிப்போடு, 500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துவதற்கான அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், கலங்கரை விளக்கம் – பெசன்ட் நகர் இடையே 4.6 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைக்க மத்தியஅரசு ஆய்வு செய்து வருகிறது. மெரினா கடற்கரையில் இருந்து, கடற்கரை ஓரமாக, பெசன்ட் நகர் வரை ரோப்கார் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை மத்தியஅரசு தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக, புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு ரோப் கார் சேவை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு மாதத்துக்குள் முழுமையான ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியை அழகுபடுத்தும் விதமாக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியும், தமிழகஅரசும் இணைந்து, சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும், மாநகராட்சிக்கு லாபத்தை ஈட்டும் விதமாகவும் சென்னை மெரினாவில் ரோப் கார் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயும் பணியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. அதாவது, மெரினா கடற்கரை களிமுக பகுதியாக அமைந்திருக்கும் நேப்பியர் பாலத்தில் இருந்து மெரினாவில் உள்ள செல்ஃபி பாயிண்ட் வரை ரோப் கார் வசதி ஏற்படுத்தலாம் என திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மத்தியஅரசும், மெரினாவில் இருந்து எலியட்ஸ் கடற்கரை வரை ரோப் கார் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறது.