சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில்  ரோப் கார் சேவை நடத்துவது குறித்து தமிகஅரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக அரசு பதவி ஏற்றபிறகு, சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னை நகரரை அழகுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சென்னை கடற்கரையில் ரோப்கார் சேவை நடத்துவதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதன்படி, கடற்காரை காமராஜர் சாலையில், நேப்பியர் பாலத்தில் இருந்து ‘நம்ம சென்னை’ செல்பி பாய்ண்ட் வரை ஒரு திட்டமும், மற்றொரு திட்டம் நேப்பியர் காலத்தில் இருந்து  ராயபுரம் ரெயில் நிலையம்  வரை மற்றொரு திட்டம் செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இந்த இரு இடங்களுக்கும் இடையே உள்ள தொலைவு 3 கி.மீ. ஆகும். 3 கி.மீட்டருக்கு ரோப் காரில் செல்லும்போது சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இதை தவிர நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் பகுதி வரை ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் மீது ரோப் கார் இயக்கும் திட்டமும் உள்ளது. இவற்றில் முதலில் எந்த திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது என்பது பற்றி தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.

 இதற்கான பரிந்துரைகளை பல்வேறு துறைகளும் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளன.  மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கினால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், என்ஜினீயர்களும் முடிவுக்கு வந்துள்ளனர்.  இதையடுத்து மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.