லஞ்சம் வழங்குவதும் லஞ்சம் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்ற நிலையில் திரைப்பட தணிக்கை சான்று வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மூன்று பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ. வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

செப்டம்பர், 2023ல், இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு, மும்பையில் உள்ள CBFC யில் இருந்து தேவையான சென்சார் சான்றிதழைப் பெறுவதற்காக, ரூ.7,00,000/- லஞ்சம் கேட்டு, ஒரு தனியார் நபர் மற்றவர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

சிபிஎஃப்சி மும்பை அதிகாரிகள் சார்பாக புகார்தாரரிடம் ரூ. 7,00,000/- லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரண்டு குற்றவாளிகளின் இரண்டு வங்கிக் கணக்குகளில் ரூ.6,54,000/- லஞ்சமாகச் செலுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதில், ரூ. 6,50,000/- வங்கியில் செலுத்தப்பட்ட அதே நாளில் பணமாக எடுக்கப்பட்டுள்ளது. தவிர, தணிக்கை அதிகாரிகளின் இடைத்தரகராக இருந்த நபரின் வங்கிக் கணக்கில் தனிப்பட்ட முறையில் ரூ. 20,000த்தை புகார்தாரர் செலுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களின் வளாகங்களில் மும்பை உட்பட நான்கு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்தியப் புலனாய்வுத் துறை, மும்பையைச் சேர்ந்த மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பொது ஊழியர்கள் மற்றும் தனியார் நபர்கள் உட்பட மூன்று தனி நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

மார்க் ஆண்டனி படம் வெளியான போது மும்பை தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சி.பி.ஐ. மேற்கொண்டுள்ள இந்த விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை அடுத்து இந்த விவகாரத்தில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.